வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், கபில் தேவ் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் இணைந்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது. ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், காயத்தால் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார் உமேஷ். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கபில் தேவ் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் உமேஷ் யாதவ் இணைந்துள்ளார். 

1980ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளையும், 1983ல் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்தடெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் கபில் தேவ். கபில் தேவுக்கு அடுத்த இடத்தில் ஸ்ரீநாத் உள்ளார். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்ரீநாத் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், இந்த பட்டியலில் இணைந்துள்ளார். 

இந்தியா, வெளிநாடு என்ற வித்தியாசம் இல்லாமல், பொதுவாக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில், கபில் தேவ், சேத்தன் சர்மா, வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீநாத், இர்பான் பதான், இஷாந்த் சர்மா, ஜாகீர் கான் ஆகியோருடன் உமேஷ் யாதவும் இணைந்துள்ளார். 

போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, உமேஷ் யாதவிற்கு புகழாரம் சூட்டினார். அப்போது பேசிய கோலி, இந்த போட்டியில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு அபாரம். 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை நிலைகுலைய செய்துவிட்டார். இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவதற்கு உமேஷ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். விரைவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவை. எனவே ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

ஷர்துல் தாகூரும் இல்லாத நிலையில், தனியொரு வேகப்பந்து வீச்சாளராக இருந்து அருமையாக பந்து வீசினார் உமேஷ். உடற்தகுதியையும் சீராக வைத்துள்ளார். உமேஷ் யாதவ் மிகவும் திறமை யான பந்துவீச்சாளர். ஆனால் பலர் அதை உணரவில்லை. எதிரணி வீரர்களால் ஆட இயலாத பந்துகளை அவர் அற்புதமாக வீசினார் என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டினார். 

புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவிற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் இருந்துவந்தது. அவர்களுக்கு முன்பிலிருந்தே இந்திய அணிக்காக ஆடிவரும் பவுலராக இருந்தாலும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய இருவர்தான் முன்னணி பவுலர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றனர். உமேஷ் யாதவ் மூன்றாவது அல்லது நான்காவது பவுலிங் தேர்வாகவே இருந்துவந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக அபாரமாக வீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ், தனது திறமையை நிரூபித்து, தன்னை ஒதுக்கியவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.