அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் - 2 போட்டிகள் ஜூன் 14-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் - 2 போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். 

அந்த அறிக்கையில், "ஜூன் 14-ஆம் தேதி புணேவில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் - 2 போட்டிகள் தொடங்குகின்றன. 

அதனைத் தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி டெல்லியிலும், 26-ஆம் தேதி கொல்கத்தாவிலும் ஆட்டங்கள் நடைபெறும். இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த சீசனில் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை ரூ.1 கோடியும், 2-ஆம் இடம் பிடிப்பவருக்கு ரூ.75 இலட்சமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. 

அரையிறுதியில் தோற்கும் இருவருக்கு ரூ.50 இலட்சம் வழங்கப்படுவதோடு, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ரூ.25 இலட்சம் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

இதனிடையே, போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளுக்கான வீரர்கள் தேர்வு வரும் 28-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. 

அதில் ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள ஒரு இந்திய வீரர் / வீராங்கனையை ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்துக் கொள்ளலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தாத அணிக்கு, முதலில் ஏலம் எடுக்க வாய்ப்பளிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.