U 19 World Cup Australia defeat India to victory ...
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவில் ஆஸ்திரேலியாவை முதல் ஆட்டத்தில் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
19 வயதுக்குள்பட்டோருக்கான யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவு ஆட்டம் நியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து, 329 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களில் வீழ்ந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் பிருத்வி ஷா 100 பந்துகளில் 94 ஓட்டங்களும், மன்ஜோத் கல்ரா 99 பந்துகளில் 86 ஓட்டங்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிகபட்சமாக சுபமன் கில் 63 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 329 என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாறியது.
அந்த அணியின் ஜாக் எட்வார்ட்ஸ் மட்டும் 73 ஓட்டங்களை குவித்தார். மற்ற அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் சிவம் மவி, கமலேஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி குரூப் பி பிரிவில் அடுத்ததாக பப்புவா நியூ கினியாவுடன் இன்று மோதுகிறது.
