சர்வதேச தரத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தரமான ரிசர்வ் வீராங்கனைகள் உருவாக குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறினார்.

இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மும்பையில் நேற்று செய்தியாளர்களிக்கு பேட்டியளித்தார். அதில், "நாம் இப்போது தான் இந்திய 'ஏ' அணியை தொடங்கி, போட்டிகளில் விளையாடி வருகிறோம். 

அணியில் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகள் உள்ளனர். சர்வதேச அணிக்கு அடுத்தபடியாக அவர்கள் தரத்துடன், திறமையாக ஆடத் தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போது அவர்கள் இன்னும் மேம்படுவார்கள்.

ஆஸ்திரேலிய அணியுடனான தொடரைப் பொருத்த வரையில், அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் மேம்பட்டிருந்தது. அந்தத் தொடரில் இந்திய பேட்டிங்கின் மிடில் ஆர்டரில் தகுந்த பார்ட்னர்ஷிப் அமையவில்லை. 

தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்ததைப் போன்று பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட இயலவில்லை. எதுவும் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் இரண்டு தொடர்களை கைப்பற்றியதையும், இந்தியாவில் தொடரை இழந்ததையும் ஒப்பிடக் கூடாது. இரண்டிலுமே, ஆடும் சூழ்நிலையும், எதிரணியின் திறமையும் முற்றிலும் வேறுபட்டதாகும். 

எதிர்வரும் முத்தரப்பு டி20 தொடரைப் பொருத்த வரையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியில் புதிய வீராங்கனைகள் இடம்பிடித்திருந்தாலும் அந்த அணிகள் பலத்துடனே உள்ளன.

இளம் வயதிலேயே அணியில் இடம்பிடிப்பது ஒரு சாதகமான வாய்ப்பாகும். ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் கூறினார்.