இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்னும் களத்தில் மோதிக்கொண்ட சம்பவம்தான், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யமான சம்பவம். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்லெட்ஜிங் மற்றும் மோதல்கள் குறித்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. முதல் போட்டியில் கம்மின்ஸ், ரிஷப் பண்ட் மற்றும் ராகுலை சீண்டினார். ரிஷப் பண்ட்டும் கவாஜா, கம்மின்ஸ் ஆகியோரை ஸ்லெட்ஜ் செய்தார். 

ஆனால் முதல் போட்டியில் அமைதி காத்த கேப்டன் கோலி, இரண்டாவது போட்டியில் களத்தில் இறங்கிவிட்டார். பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் குவித்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 287 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் நான்கு விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்ட நிலையில், கவாஜா மற்றும் டிம் பெய்ன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். அதுவரை அடங்கியிருந்த விராட் கோலி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை சீண்டினார். மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்து செல்லும்போது இருவரும் சில வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டனர். நீ மட்டும் சொதப்பினால் 2-0 என முன்னிலை பெறுவோம் என கோலி டிம் பெய்னிடம் சொல்ல, அதற்கு நீங்கள் முதலில் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும் என்று டிம் பெய்ன் பதிலடி கொடுத்தார். இவையெல்லாம் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. 

இப்படியாக மூன்றாம் நாள் முடிய நான்காம் நாள் ஆட்டத்திலும் இது தொடர்ந்தது. மூன்றாம் நாள் மோதலின் இரண்டாம் பாகம் நான்காம் நாள் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 71வது ஓவரில் டிம் பெய்ன் ரன் ஓடும்போது, எதிர்முனை கிரீஸருகே கோலி நின்றுகொண்டிருக்க, அவரை உரசி ரன்னை பூர்த்தி செய்தார் டிம் பெய்ன். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் மோதிக்கொள்ளவில்லை. உடலின் வேகத்தை கட்டுப்படுத்தி நின்றனர். பின்னர் இதுகுறித்து அம்பயரிடம் டிம் பெய்ன் புகார் செய்ய, மீண்டும் கோலிக்கும் டிம் பெய்னுக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. பின்னர் அம்பயர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துவைத்தார். 

அதன்பின்னர் புதிய பந்து எடுத்ததும், ஷமி வீசிய பவுன்ஸரில் டிம் பெய்ன் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு மளமளவென ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிய, அந்த அணி 243 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது.