Tuticorin tuti Patriots team got banned for one month

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடியின் 'தூட்டி பேட்ரியாட்ஸ்' அணி வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கோரிய வழக்கில் அந்த அணிக்கு விளையாட ஒரு மாதம் தடை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.

தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (பி) லிமிடட் என்ற நிறுவனத்தின் இயக்குநர் ஆல்பர்ட் முரளிதரன். இவர், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தூட்டி பேட்ரியாட்ஸ் என்ற அணியின் உரிமையாளர்களில் ஒருவர். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு நடைபெற்ற அணி ஏலத்தின்போது, தூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வாங்கிய ஆல்பர்ட் முரளிதரன், இதுதொடர்பாக இந்தியன் வங்கியுடன் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி ரூ.5.21 கோடி கடன் பெற்றிருந்தார்.

ஓராண்டுக்குள் பணத்தை திரும்பச் செலுத்துவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை ரூ.2.69 கோடி செலுத்தவில்லை.

இதுதொடர்பாக ஆல்பர்ட் முரளிதரன் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், இந்தியன் வங்கியினர் ஒப்பந்தப்படி பணத்தைச் செலுத்துமாறு தெரிவித்துவிட்டனர். ஆனால், பணத்தைத் திரும்பச் செலுத்தாத நிலையில், இதுகுறித்து இந்தியன் வங்கியின் தூத்துக்குடி கடற்கரைச் சாலை கிளை மேலாளர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்தியன் வங்கி சார்பில் வழக்குரைஞர் செங்குட்டுவன் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தூட்டி பேட்ரியாட்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விளையாடத் தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டார்.

நிகழாண்டுக்கான டின்பிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது கொசுறு தகவல்.