tripathi missed two catches given by watson

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி ஒருதலைபட்சமான போட்டியாகவே அமைந்தது. வெற்றிக்கு அருகில் கூட ராஜஸ்தானால் வர முடியவில்லை. இந்த தோல்விக்கு சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சனின் இரு கேட்ச் வாய்ப்புகளை ராஜஸ்தானின் திரிபாதி தவறவிட்டது மிக முக்கிய காரணம்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு களமிறங்கினர். முதல் ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். முதல் ஓவரிலேயே வாட்சன் கேட்ச் வாய்ப்பை கொடுக்க, ஸ்லிப்பில் நின்ற திரிபாதி, அந்த கேட்ச்சை தவறவிட்டார். எளிமையான அந்த கேட்ச் வாய்ப்பை திரிபாதி தவறவிட்டார். 

அதன்பிறகு, இரண்டாவது ஓவரின் கடைசி பந்திலும் ஒரு கேட்ச் கொடுத்தார் வாட்சன். ஆனால் அதையும் பாயிண்ட் பொசிசனில் நின்ற திரிபாதி மீண்டும் தவறவிட்டார். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட வாட்சன், அதன்பிறகு அதிரடியாக ஆடி சென்னை அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார். வெறும் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். வாட்சனின் அதிரடியால், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்கள் குவித்தது.

205 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின், எந்த வீரரும் சோபிக்கவில்லை. ரஹானே, கிளாசன், சாம்சன் ஆகிய டாப் ஆர்டர்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். பென் ஸ்டோக்ஸ் மட்டும் 45 ரன்கள் அடித்தார்.

இலக்கை நெருங்கவே முடியாத ராஜஸ்தான் அணி 18.3 ஓவருக்கே 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆட்டநாயகனாக ஷேன் வாட்சன் தேர்வு செய்யப்பட்டார். முதல் இரண்டு ஓவர்களில் வாட்சன் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்பில் ஒன்றை பயன்படுத்தியிலிருந்தாவது சென்னை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். திரிபாதி தவறவிட்ட 2 கேட்ச்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, ராஜஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.