இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தையடுத்து, கண்டி பகுதியில் அடுத்த 10 நாள்களுக்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.  

 

நிடாஹஸ் டி20 முத்தரப்புப் போட்டி, மார்ச் 6 முதல் மார்ச் 18 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் இதில் பங்கேற்கின்றன.

 

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் கொழும்பில் இன்று மோதுகின்றன. இந்திய நேரம் இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

 

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலால் நிடாஹஸ் போட்டி இன்று ஆரம்பமாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

அவர், "கொழும்பில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 ஆட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.

 

பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம், "கண்டியில்தான் அதுபோன்ற சூழல் உள்ளது. கொழும்பில் அல்ல. பாதுகாப்பு அதிகாரிகளுடம் இதுகுறித்து விவாதித்தோம். கொழும்பில் நிலைமை இயல்பாக உள்ளதாக நாங்கள் அறிந்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.