Tony makes my 50 percent work easier - Kuldeep Yadav
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் அதிக அனுபவம் வாய்ந்தவரான டோனி, சுழற்பந்து வீச்சாளராக எனது 50 சதவீத பணிகளை எளிதாக்கி விடுகிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 10 ஓவர்களில் 34 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:
"தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக பந்து வீசியது புதுமையான அனுபவம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் குழம்பி போனேன்.
காற்றின் தாக்கமும் இருந்ததால் எந்த மாதிரி பவுலிங் செய்தால் சரியாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘வழக்கம் போல் எப்படி பந்து வீசுவீர்களோ அதே போன்று வீசுங்கள்’ என்று கூறினார். தொடர்ந்து அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.
அணியில் விராட் கோலி, டோனி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஒட்டுமொத்த அணியை (கோலி) வழிநடத்துகிறார். இன்னொருவர் வீரர்களுக்கு (டோனி) பக்கபலமாக இருக்கிறார்.
அதிக அனுபவம் வாய்ந்தவரான டோனி, பேட்ஸ்மேன்களை கணிப்பதில் வல்லவர். ஒரு சுழற்பந்து வீச்சாளராக எனது 50 சதவீத பணிகளை டோனி எளிதாக்கி விடுகிறார்.
இளம் வீரர்களாக இருக்கும்போது, போதிய அனுபவம் இருக்காது. அதனால் தான் டோனி, சூழ்நிலைக்கு தகுந்தபடி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.
விராட் கோலி எப்போதும், ‘10 ஓட்டங்களை தடுப்பதற்கு முயற்சிப்பதை விட கூடுதலாக ஒரு விக்கெட் வீழ்த்துவது முக்கியமானது’ என்று சொல்வார்.
எனக்கும், யுஸ்வேந்திர சாஹலுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. 5 ஆண்டுகளாக இருவரும் இணைந்து (ஐ.பி.எல். கிரிக்கெட்டையும் சேர்த்து) பந்து வீசி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
