கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப் போடுமா டிஎன்பிஎல் ? சென்னையில் இன்று தொடங்குகிறது

இரண்டாவது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தல தோனி இப்போட்டிகளை தொடங்கிவைக்கிறார்.

லோக்கல் ஐபிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக்) கிரிக்கெட் தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக இன்று தொடங்கும் இத்தொடர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இத்தொடரில், தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில் அதிக புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும். இப்போட்டி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும். இதில், வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு உறுதியாகும்.

அடுத்து நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகள் விளையாடும். ஆகஸ்ட் 16ஆம் தேதி நடக்கும் இப்போட்டியில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோற்ற அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். எலிமினேட்டர் ஆட்டத்தில் தோற்கும் அணி தொடரில் வெளியேற்றப்படும்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும்.

இத்தொடரின் தொடக்க நாளான இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சிக்ஸ் அடிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.