Today begins wheelchair basketball tournament for alternatives
ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தென்னிந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி இன்றுத் தொடங்குகிறது.
தென்னிந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி ஒருங்கிணைப்பாளரும், ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளருமான மக்கள் ஜி.ராஜன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தென்னிந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி நாளை (அதாவது இன்று) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடக அணிகள் கலந்து கொள்கின்றன. ஆடவர், மகளிர் பிரிவுகளில் தலா ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாநகராட்சி ஆணையர் எம்.சீனி அஜ்மல்கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கத் தலைவர் மெட்டில்டா போன்ஸிகா, செயலர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
உலக மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மூன்று வீரர்கள் தமிழக அணிக்காக இந்தப் போட்டியில் களமிறங்குகின்றனர்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரொக்கப் பரிசாக ரூ. 25,000, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையுடன் ரூ.20000 பரிசாக வழங்கப்படும். பரிசளிப்பு விழா செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும்” என்றுத் தெரிவித்தார்.
