டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை வீழ்த்தியதன்மூலம் தொடரில் 2-வது வெற்றியைப் பெற்று அசத்தியது காரைக்குடி காளை அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் காரக்குடி - திருவள்ளூர் அணிகள் மோதும் ஆட்டம் திண்டுக்கலில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதுர்வேதி 31 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள், அபராஜித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

காரைக்குடி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய காரைக்குடி அணியில் விஷால் வைத்யா - அனிருத்தா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 54 ஓட்டங்கள் சேர்த்தது. விஷால் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேப்டன் பத்ரிநாத் 11 ஓட்டங்களில் அவுட்டாக, ஷாஜன் களம்புகுந்தார். அந்த அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அனிருத்தா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இதன்பிறகு அந்த அணி சரிவுக்குள்ளாக மீண்டும் களம்புகுந்த அனிருத்தா 34 பந்துகளில் அரை சதம் கண்டதோடு, காரைக்குடி அணிக்கு வெற்றிக்கு வழிநடத்தினார்.

அந்த அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

அனிருத்தா 35 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திருவள்ளூர் அணி தரப்பில் அபிஷேக் தன்வார், ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் திருவள்ளூர் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டிஎன்பிஎல்-லில் தனது இரண்டாவது வெற்றியப் பெற்றது காரைக்குடி அணி.