உலக கோப்பை நெருங்கும் நேரத்தில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா அபாரமான ஃபார்மில் இருப்பது, இலங்கை அணியை உற்சாகமடைய வைத்துள்ளது.

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மற்ற அணிகளை காட்டிலும் வலுவாக உள்ளன. முன்னாள் சாம்பியனும் உலக கோப்பையின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான இலங்கை அணி அண்மைக்காலமாகவே பெரியளவில் ஆடுவதில்லை. ஒரு அணியாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது அந்த அணி.

எனினும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் அபாரமாக ஆடி 74 பந்துகளில் 140 ரன்களை குவித்த திசாரா பெரேரா, மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சிறப்பாகவே ஆடினார். 

நியூசிலாந்து தொடர் முடிந்த நிலையில், வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார் திசாரா பெரேரா. விக்டோரியன்ஸ் மற்றும் சிட்டகாங் வைகிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விக்டோரியன்ஸ் அணி, 14 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு எஞ்சிய 6 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடினார் திசாரா பெரேரா. 20 பந்துகளில் அரைசதம் அடித்த பெரேரா, 26 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்தார். இதில் 19வது ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி மற்றும் 2 ரன் என மொத்தம் 30 ரன்களை குவித்தார். 

14 ஓவருக்கு வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விக்டோரியன்ஸ் அணி, திசாரா பெரேராவின் காட்டடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. எனினும் இந்த இலக்கை கடைசி ஓவரில் எட்டிய வைகிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் திசாரா பெரேராவின் உச்சகட்ட ஃபார்ம், இலங்கை அணியை உற்சாகமடைய வைத்துள்ளது.