இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆடப்பட்டது. இதில் ஒரு போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி 1-0 என தொடரை வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் கோலின் முன்ரோ 87 ரன்களையும் ரோஸ் டெய்லர் 90 ரன்களையும் குவித்தனர். 40 ஓவருக்கு மேல் அடித்து ஆடிய நீஷம், 5 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்களுடன் 37 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். இதையடுத்து அந்த அணி 50 ஓவர் முடிவில் 319 ரன்களை குவித்தது. 

320 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குணதிலகா, ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் டிக்வெல்லா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குணரத்னே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 27 ஓவருக்கு வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது.

போட்டி முழுக்க முழுக்க நியூசிலாந்து பக்கம் இருந்த நேரத்தில், அந்த அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார் திசாரே பெரேரா. அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்த திசாரா பெரேரா, 56 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக ஆடி இலங்கைக்கு அணிக்கு நம்பிக்கையளித்த திசாரே, வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். 44 ஓவருக்கு இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை எடுத்திருந்தது. 

கடைசி 6 ஓவர்களில் இலங்கை அணியின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. எனினும் அத்தகைய சூழலிலும் நம்பிக்கையை தளரவிடாத திசாரா, போராடி பார்த்தார். நீஷம் வீசிய 45வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு ரன் உட்பட 12 ரன்கள் எடுத்தார். இதையடுத்து சௌதி வீசிய 46வது ஓவரில் வானவேடிக்கை நிகழ்த்தினார் திசாரா. சௌதி வீசிய அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து 24 ரன்களை குவித்தார். எனினும் 47வது ஓவரில் கடைசி விக்கெட்டாக திசாரா பெரேரா அவுட்டாக, 298 ரன்களில் இலங்கை அணி ஆல் அவுட்டானதால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய திசாரா பெரேரா, 74 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 140 ரன்களை குவித்து மிரட்டினார். இறுதியில் டிரெண்ட் போல்ட்டின் அருமையான கேட்ச்சில் வெளியேறினார் திசாரா பெரேரா. இந்த போட்டியில் 13 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக 11 சிக்ஸர்களுடன் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த ஜெயசூரியாவின் சாதனையை முறியடித்தார் திசாரா பெரேரா.