This is the reason for the batsmen to run without crisis - Roghit Sharma

பந்துவீச்சாளர்கள் எதிரணியை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்தியதுதான் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி செயல்படவும் வெற்றிப் பெறவும் வழிவகுத்தது என்று தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அப்போது ரோகித் சர்மா கூறியது: “நான் கடந்த 10 ஆண்டுகளாகதான் அணியில் இடம் பெற்று வருகிறேன். தற்போதைய இந்திய அணியில் மாற்று வீரர்களின் பலம் வலுவாக இருக்கிறது.

மாற்று வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் உடனடியாக சிறப்பாக செயல்படுகிறார்கள். இது சவாலை எதிர்கொண்டு சிறப்பாக செயல்படக்கூடிய மாற்று வீரர்கள் அணியில் இருப்பதையே காட்டுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக களம் கண்ட அக்‌ஷர் பட்டேல் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹானே இந்த போட்டி தொடரில் நிலையாக ரன்கள் சேர்த்தார். இவையெல்லாம் இந்திய அணிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உணர்த்துகிறது.

நமது அணியில் உள்ள எல்லா பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற சிந்தனையுடன் செயல்படுகின்றனர். ஆஸ்திரேலிய அணியை 242 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.

பந்துவீச்சாளர்கள் எதிரணியை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்தியது பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி செயல்பட வழிவகுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் அளிக்கும் நல்ல தொடக்கத்தை அணி அதிகம் நம்பி இருக்கிறது. எனவே தொடக்க ஆட்டக்காரராக ரன்கள் குவிப்பது எனது கடமையாகும்.

எதிரணியை பார்த்து அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு பேட்டிங் செய்வது தான் எனது வாடிக்கையாகும். அதனை வருங்காலங்களிலும் தொடருவேன்.

மும்பை அணிக்காக நானும், ரஹானேவும் இணைந்து பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். ஆட்டத்தின்போது இருவரும் சூழ்நிலை குறித்து விவாதித்து அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு செயல்படுவோம்.

அதுபோன்ற ஆலோசனை இந்த தொடரில் சிறப்பான தொடக்க ஆட்டம் அமைய உதவிகரமாக இருந்தது.

ரஹானே இந்த தொடரில் சிறப்பாக ஆடினார். அத்துடன் புதிய பந்தை எதிர்கொள்வதிலும் அவர் நன்றாக செயல்பட்டார்” என்று அவர் பாராட்டினார்.