சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷியாவின் மிகைல் யூஸ்னி, பிரான்ஸின் பெனாய்ட் பேர் அல்ஜாஸ் பெடேன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்திய வீரர் யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெனாய்ட் பேரிடம் தோற்று வெளியேறினார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ராம்குமார், சாகேத் மைனேனி ஆகியோர் தங்களின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.

22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 4-ஆவது நாளான வியாழக்கிழமை பிரதான கோர்ட்டில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் பெளதிஸ்டா அகுட்டும், பிரேசிலின் ரோஜெரியோ சில்வாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய பெளதிஸ்டா, 6-ஆவது கேமில் மிக எளிதாக சில்வாவின் சர்வீஸை முறியடித்து 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதேநேரத்தில் சில்வா சரிவிலிருந்து மீள்வதற்கு போராடினார். அதன் உச்சக்கட்டமாக 9-ஆவது கேமில் பெளதிஸ்டாவின் சர்வீஸை முறியடிக்க முயற்சித்தார்.

ஆனால் விடாப்பிடியாக போராடிய பெளதிஸ்டா, தனது சர்வீஸை காப்பாற்றியதோடு, அந்த செட்டையும் முடிவுக்கு கொண்டு வந்தார். 33 நிமிடங்கள் நடைபெற்ற அந்த செட் 6-3 என்ற கணக்கில் பெளதிஸ்டா வசமானது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 3-ஆவது கேமில் சில்வாவுக்கு நெருக்கடி கொடுத்தார் பெளதிஸ்டா. 3 முறை டியூஸ் வரை சென்ற அந்த கேமில் 3 முறையும் அட்வான்டேஜ் பெற்ற சில்வா, இறுதியில் தனது சர்வீஸை காப்பாற்றினார்.

இதையடுத்து ஆக்ரோஷமாக ஆடிய சில்வா, அடுத்த கேமில் பெளதிஸ்டாவுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

இதன்பிறகு அட்டகாசமாக ஆடிய பெளதிஸ்டா, 5 மற்றும் 7-ஆவது கேம்களில் சில்வாவின் சர்வீஸை முறியடித்தார். இதனால் அந்த செட் 6-2 என்ற கணக்கில் அவர் வசமாக, ஆட்டம் 1 மணி, 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தில் சில்வா அசத்தலாக ஆடியபோதும், பெளதிஸ்டா தனது அற்புதமான பேக்ஹேண்ட் ஷாட்களால் அவரை வீழ்த்தினார்.

பெளதிஸ்டா தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருப்பவரும், 2008 சென்னை ஓபன் சாம்பியனுமான ரஷியாவின் மிகைல் யூஸ்னியை சந்திக்கிறார்.