காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டிகளில் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, சாய்னா நேவால், ருத்விகா , பிரணாய், சத்விக் ரங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை,  பிரணவ்சோப்ரா - சிக்கிரெட்டி இணை, அஸ்வினி - சிக்கிரெட்டி இணை, சத்விக் - சிராக் இணை ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்,. 

காலிறுதிச் சுற்றுக்கு இந்திய அணியினர் முன்னேறி உள்ளனர்.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

இதன், பாட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.  அதில், சிந்து 21-15, 21-9 என்ற செட்கணக்கில் ஆஸி.யின் சுவான் வெண்டியை வீழ்த்தினார். 

சாய்னா நேவால் 21-4 என முதல் செட்டை வென்ற நிலையில் அவருக்கு எதிராக ஆடிய ஜெஸிக்கா லீ காயம் காரணமாக வெளியேறினார். 

ருத்விகா கட்டே 21-10, 21-23, 21-10 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஜியா மின்னை வீழ்த்தினார். 

அதேபோன்று ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-10, 21-10 என எளிதாக இலங்கையின் கருணரத்னேவை வென்றார். 

பிரணாய் 21-18, 21-11 என ஆஸி.யின் அந்தோணி ஜோவை வென்றார். 

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் சத்விக் ரங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை-21-10, 21-7 என்ற கணக்கில் கனடாவின் கிறிஸ்டன் சாய் - யகுரா இணையை வீழ்த்தியது. 

பிரணவ்சோப்ரா - சிக்கிரெட்டி இணை 21-19, 21-13 என சிங்கப்பூரின் டேனிகிறிஸ்டினா - ஜியா விங்கை வென்றது. 

மகளிர் இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி - சிக்கிரெட்டி இணையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் - சிராக் இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.