இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் நேற்று உடனடியாக நீக்கி அதிரடி உத்தரவிட்டது. அதற்கு கருத்து தெரிவித்த்அ அனுராக், “இது தனிப்பட்ட மோதல் அல்ல. சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரு விளையாட்டு அமைப்புக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையேயான போராட்டமாகும்” என்றுத் தெரிவித்தார்.

பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐ மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிசிசிஐ தலைவர் மற்றும் செயலரை நீக்கியுள்ள நிலையில், அதன் பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாகிகள் குழு ஒன்றை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அந்த நிர்வாகிகள் குழுவிற்கான உறுப்பினர்களை நியமனம் செய்ய உதவுமாறு, மூத்த வழக்குரைஞர்கள் ஃபாலி எஸ்.நாரிமன், கோபால் சுப்ரமணியன் ஆகியோரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் பிசிசிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவிகள் செய்து வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாரிமன் மற்றும் கோபால் ஆகிய இருவரும் தங்களது அறிக்கையை 2 வாரங்களுக்குள்ளாக சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், பிசிசிஐ நிர்வாகிகள் குழு உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரத்தை வரும் 19-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

பிசிசிஐயின் புதிய தலைவர் மற்றும் செயலர் நியமிக்கப்படும் வரையில், அதன் தலைவராக மூத்த துணைத் தலைவரும், செயலராக, இணைச் செயலரும் செயல்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பிசிசிஐயில் தற்போதுள்ள துணைத் தலைவர்களில் தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவரான சி.கே.கன்னா மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட லோதா குழு பரிந்துரைகளுக்கு, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் இணங்கிச் செயல்பட வேண்டும் என்றும், அதற்கு மறுப்பவர்கள் உடனடியாக பொறுப்பு நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் அனுராக் தாக்குருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள உச்ச நீதிமன்றம், "லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தடைகள் நீடித்து வருவதற்கு உங்களை ஏன் பொறுப்பாளியாக்கக் கூடாது?' என்று கேள்வி எழுப்பி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிசிசிஐயில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

பிசிசிஐ பொறுப்புகளில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீடிக்கக் கூடாது, அமைச்சர்கள் உள்ளிட்டோர் அதில் பொறுப்பு வகிக்கக் கூடாது, ஒரு நபருக்கு 2 பொறுப்புகள் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அந்தக் குழு வழங்கியது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்ற உச்ச நீதிமன்றம் அதனை அமல்படுத்த பிசிசிஐக்கு உத்தரவிட்டது. எனினும், அதை செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி பிசிசிஐ மறுத்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பிசிசிஐ செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அஜய் ஷிர்கே கூறியதாவது:

“உச்ச நீதிமன்ற உத்தரவில் எந்த வருத்தமும் இல்லை. பிசிசிஐ உடனான எனது தொடர்பு இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தை வேறு விதத்தில் கையாள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. வரலாற்றை திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. அது, ஒவ்வொருவரைப் பொறுத்த அளவில் வேறுபடும். இந்த விவகாரம், தலைவர் மற்றும் செயலரைப் பொறுத்தது அல்ல. ஒட்டுமொத்தமாக பிசிசிஐ உறுப்பினர்களைப் பொறுத்த விவகாரம்.

உலக அரங்கில் தனக்காக இருக்கும் பலமிக்க இடத்தை பிசிசிஐ இழக்காது என்று நம்புகிறேன். இதுவரையில் தொடர்ந்த நல்ல பணிகளை புதிதாக அமையும் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணி 3 விதமான கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை தொடர வேண்டும் என விரும்புகிறேன்” என்று அஜய் ஷிர்கே கூறினார்.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அனுராக் தாக்குர் கூறியதாவது:

“என்னைப் பொறுத்த வரையில் இது தனிப்பட்ட மோதல் அல்ல. சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரு விளையாட்டு அமைப்புக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையேயான போராட்டமாகும். ஓர் இந்தியக் குடிமகனாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் பிசிசிஐ சிறப்பாகச் செயல்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருதினால், அதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வழிகாட்டுதலின் கீழ் இந்திய கிரிக்கெட் நன்றாகச் செயலாற்றும்.இந்திய கிரிக்கெட் மற்றும் பிசிசிஐ மீதான எனது அக்கறை எப்போதும் தொடரும்” என்று அனுராக் தாக்குர் கூறினார்.