The state-of-the-art basketball tournament for boys from the age of 18 will start from the 26th ...
பதினெட்டு வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது என்று தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.டி.பிரம்மானந்தம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.டி.பிரம்மானந்தம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும், 18 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், தூத்துக்குடியில் வரும் 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 30 மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தப் போட்டியை, வரும் 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். பின்னர், 29-ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், பரிசுகளை வழங்குகிறார்.
இந்தப் போட்டியின் மூலமாக, வரும் மே மாதம் 2-வது வாரம் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெறவுள்ள அகில இந்திய போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான 12 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
