உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட், தனது கடைசி உலக சாம்பியன்ஷிப்பின் கடைசிப் போட்டியான 400 மீ. தொடர் ஓட்டத்தில் தசைப்பிடிப்பின் காரணமாக தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 400 மீ. தொடர் ஓட்டத்தில் உமர் மெக்லியாட், ஜூலியன் போர்ட், யோகன் பிளேக், உசேன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி பங்கேற்றது.

இதில் 4-வது நபராக உசேன் போல்ட் ஓடினார். அவர் வழக்கம்போல் இந்த முறையும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக அவருடைய காலில் தசைப்பிடிப்பு ஏற்பட அப்படியே நிலைகுலைந்து ஓடுதளத்தில் சரிந்தார். அதைப் பார்த்த மைதானத்தில் இருந்த 60 ஆயிரம் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அதேநேரத்தில் பிரிட்டன் அணி 37.47 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தையும், அமெரிக்கா 37.52 இலக்கை எட்டி வெள்ளியையும், ஜப்பான் 38.04 இலக்கை எட்டி வெண்கலத்தையும் வென்றன.

உலக தடகளத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போல்ட், ஒலிம்பிக்கில் 100 மீ. ஓட்டத்தில் மூன்று தங்கங்கள், 200 மீ. ஓட்டத்தில் மூன்று தங்கங்கள், 400 மீ. ஓட்டத்தில் இரண்டு தங்கங்கள், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டு மொத்தமாக 11 தங்கங்கள், இரண்டு வெள்ளிகள், ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

இதுதவிர 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் உலக சாதனை இன்றளவும் போல்ட் வசமேயுள்ளது. அவர் தங்கம் வெல்லாத ஒரே போட்டி இந்த உலக சாம்பியன்ஷிப்தான்.

இந்த முறை 100 மீ. ஓட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஜஸ்டின் கேட்லினிடம் தங்கப் பதக்கத்தைப் பறிகொடுத்த உசேன் போல்டுக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

400 மீ. தொடர் ஓட்டத்தில் பதக்க வாய்ப்பை இழந்தபோதிலும், வழக்கம் போல் மைதானத்தை சுற்றி வந்த உசேன் போல்ட், ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து பிரியா விடை பெற்றார்.