The Indian team lost by 6 wickets in one day match against New Zealand at Wankhede Stadium yesterday.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

இருந்தபோதிலும், அணித் தலைவர் விராத் கோலி சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளைச் செய்துள்ளார்.

கோலி அடிக்கும் ஒவ்வொரு சதமும் அவருக்கு முத்தாய்ப்பாகவே இருந்து வருகிறது.

1. மும்பையில் நியூசிலாந்து எதிராக நடந்த ஒரு நாள்போட்டி, இந்திய அணித் தலைவர் விராத் கோலிக்கு 200-வது போட்டியாகும். இதில் சதம் விளாசிய விராத் 121ரன்கள் குவித்து அசத்தினார். 200-வது ஓருநாள் போட்டியில் களமிறங்கி சதம் அடித்த 2-வது வீரர் எனும் பெருமையை விராத் பெற்றார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் மட்டுமே 200வது போட்டியில் களமிறங்கி சதம் அடித்த பெருமையை பெற்று இருந்தார். 

2. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச சதங்கள் விளாசிய 2-வது வீரர் எனும் பெருமையையும் விராத் இப்போட்டியின் மூலம் தட்டிச் சென்றார். சச்சின் டெண்டுல்கர்(49சதம்) சாதனைக்கு அடுத்த அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், 30 சதங்கள் அடித்து 2-ம் இடத்தில் இருந்தார். அவரை 3-வது இடத்துக்குள் தள்ளி, விராத் 2-வது இடம் பிடித்தார்.

3. 200 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள விராத் கோலி 8 ஆயிரத்து 888 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 55.55 ரன்களும், அதிகபட்சமாக 183 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் 31 சதங்கள், 45 அரைசதங்கள் அடங்கும்.

4. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 200 ஒருநாள் போட்டிகளில் 8,888 ரன்கள் சேர்த்த முதல் வீரர் எனும் பெருமையை விராத் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் டி வில்லியர்ஸ் 8,621 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருந்தார். அதையும் முறியடித்த கோலி, டிவில்லியர்ஸை 2-வது இடத்துக்கு தள்ளியுள்ளார். இவர்கள் இருவருக்கும் போட்டியாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா எதிர்காலத்தில் ஒருவேளை உருவாகலாம். அவர் 158 போட்டிகளில் 21 சதங்களுடன் 7,381 ரன்களுடன் உள்ளார். இன்னும் அம்லா 42 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உண்டு.

5. விராத் கோலி சதம் அடித்தும், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில், முதல் இன்னிங்சில், 300 ரன்களுக்கும் குறைவாகச் சேர்த்தது இது 3-வது முறையாகும். இதற்குமுன், கடந்த 2015ல் ெசன்னையில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராத் கோலி 138 ரன்கள் சேர்த்தார். அந்த போட்டியில் இந்திய அணி 299 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

6. 2-வதாக 2016ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்செய்த இந்திய அணி 295 ரன்கள் சேர்த்தது. இதில் விராத் கோலி 117 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

7. விராத் கோலியின் திறமையும், ரன்குவிப்பும் ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிவருவதை நாம் கண்கூடாகக் காணமுடியும். முதல் 50 ஒரு நாள் போட்டியில் விராத் கோலியின் பேட்டிங் சராசரி 45.67. ஆக இருந்தது. அடுத்த 51 முதல் 100 போட்டிகளில் கோலியின் சராசரி 51.81.ஆகவும், 101 முதல் 150 வரையிலான போட்டிகளில் 57.83 சராசரியாகவும், 151 முதல் 200 போட்டிகள் வரை கோலியின் பேட்டிங் சராசரி 68.10 என வளர்ந்து கொண்டே வந்துள்ளது.

8. 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் விராத் கோலியின் பேட்டிங் திறமை அபாரமாக வளர்ச்சியடைந்து, எதிரணிக்கு சிம்பசொப்னமாக திகழ்ந்து வருகிறது. இரு ஆண்டுகளில் 34 இன்னிங்சில் பங்கேற்ற கோலி 2,057 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 சதங்கள் உள்ளடங்கும். பேட்டிங் சராசரி 82.88, ஸ்டிரைக் ரேட் 99.03 ஆகும்.

9. விராத் கோலியைப் பொருத்தவரை முன்பெல்லாம் இந்திய அணி சேஸிங் செய்யும் போது, அதாவது 2-வது பேட் செய்யும் போதுதான் அவரின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். அதாவது 2015ம் ஆண்டு வரை இந்திய அணி சேஸிங் செய்தால் அதில் கோலியின் சராசரி 61.34 ஆகவும், முதலில் பேட் செய்தால் 39.01 சராசரியாகவும் ரன் குவிப்பு இருந்தது. 

10. 2016ம் ஆண்டுக்கு பின், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தாலும், அல்லது சேஸிங் செய்தாலும் விராத் கோலியின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்செய்தால் கோலியின் சராசரி ரன் குவிப்பு 74.58 ஆகவும், சேஸிங் செய்தால் 89.38ஆகவும் இருக்கிறது. 

11. 2015ம் ஆண்டு வரை இந்திய அணி முதலில் பேட்செய்தால், விராத் கோலி 8 போட்டிகளுக்கு ஒருமுறை மட்டுமே சதம் அடித்தார். ஆனால், இப்போது அது 4 போட்டிகளுக்கு ஒரு முறை சதம் அடித்து வருகிறார்.

12. 2008ம்ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்திய அணி முதலில் பேட் செய்ததில், விராத் கோலி 69 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 9 சதங்கள், 12 அரைசதங்கள் உள்ளிட்ட 2,537 ரன்கள் குவித்தார். இவரின் சராசரி 39.03 மட்டுேம ஆகும்

13. 2016 முதல் 2017ம் ஆண்டு வரை இந்திய அணி முதலில் பேட் செய்ததில் விராத் கோலி 14 போட்டிகளில் பங்கேற்றார். அதில் 2 போட்டிகளில் ரன் எடுக்கவில்லை. இதில் 3சதங்கள், 6 அரைசதங்கள் உள்ளிட்ட 895 ரன்களும் குவித்துள்ளார். இந்த ஒரு ஆண்டில் இவரின் சராசரி 75 ஆகும்.