வழக்கம்போல் சொதப்பிய ரோகித்; பட்டும் திருந்தாத கோலி; தடுமாறும் இந்தியா; தோல்வியை தவிர்க்குமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) அடித்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் சதம் (114 ரன்) விளாசினார்.
பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழந்து 228 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 91/6 என்ற நிலையில் இருந்தபோது, மார்னஸ் லபுஸ்சேன் (70 ரன்), பேட் கம்மின்ஸ் (41), நாதன் லயன் (41) ஆகியோர் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்து மீட்டனர்.
இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்கு
இந்த நிலையில், இன்று கடைசி மற்றும் 5ம் நாள் ஆட்டம் நடந்தது. லயன் (41) பும்ராவின் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டானார். இதனால் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணிக்கு 340 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் டிரா செய்யும் நோக்கத்துடன் ஆடினார்கள்.
ரோகித் சர்மா சொதப்பல்
அதிரடி வீரர்களான இவர்கள் இருவரும் அதிக பந்துகளை அடிக்காமல் விட்டனர். ஸ்டெம்புக்கு வந்த பந்துகளையும் ரன் அடிக்க நினைக்காமல் ஸ்டோக் வைத்தனர். ஆனாலும் ஆஸ்திரேலிய பவுலர்கள் மனம் தளராமல் சரியான லைன் அண்ட் பந்துகளை வீசிக் கொண்டே இருந்தனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஸ்கோர் 16.1 ஓவரில் 25 ஆக உயர்ந்தபபோது ரோகித் சர்மா கம்மின்ஸ் வீசிய பந்தை லெக் சைடில் அடிக்கபோய், அது பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு கவாஜா கையில் தஞ்சம் அடைந்தது. 40 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 9 ரன்னில் வெளியேறினார்.
திருந்தாத கோலி
அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் அதே கம்மின்ஸ் ஓவரில் டக் அவுட் ஆனார். அதாவது கே.எல்.ராகுல் பந்தை அடிக்கமால் பேட்டை உள்நோக்கி கொண்டு சென்றபோது பந்து தானாக பேட்டில் உரசி கவாஜா கையில் கேட்ச் ஆனது. பின்னர் களம் கண்ட விராட் கோலியும் 5 ரன்னில் ஸ்டார்க் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவுட் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே எங்கேயோ சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து அவர் தனது விக்கெட்டை இழந்தார்.
தோல்வியை தவிர்க்குமா?
அவுட் ஆப் ஸ்டெம்ப் பந்தில் கோலி அவுட் ஆவது தொடர்கதையாகி வருகிறது. எத்தனை முறை அந்த பந்தில் அவுட் ஆனாலும் அவர் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. தற்போது வரை இந்திய அணி 31 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் (97 பந்தில் 31 ரன்கள்), ரிஷப் பண்ட் (4 ரன்) களத்தில் உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 60 ஓவர்கள் பாக்கி இருக்கும் நிலையில், இந்திய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெறுவது கடினம். அதே வேளையில் 7 விக்கெட் கையில் இருப்பதால் 60 ஓவர்கள் தாக்குப்பிடித்து டிரா செய்யலாம். இதேபொல் இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.