19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. நமது இளம் வீராங்கனைகள் தொடர்ந்து 2வது முறையயாக கோப்பையை வென்று அசத்தியுள்ளனர்.

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை

16 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நடந்து வந்தது. இதில் இந்திய பெண்கள் அணியும், தென்னாப்பிரிக்க பெண்கள் அணியும் இன்று இறுதிப்போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

நமது இளம் வீராங்கனைகளில் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கெய்லா ரெய்னெக் (7 ரன்), ஜெம்மா போத்தா (16), டயாரா ராம்லகன் (3 ரன்), கரபோ மெசோ (10) என தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் மீகே வான் வூர்ஸ்ட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 23 ரன்கள் எடுத்தார். அதிரடி வீராங்கனை சிமோன் லோரன்ஸ் உள்ளிட்ட 4 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.

இந்தியா கோப்பையை வென்றது 

இந்திய அணி தரப்பில் கோங்கடி த்ரிஷா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வைஷ்ணவி சர்மா, ஆயுஷி சுக்லா, பருணிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினார்கள். ஸ்கோர் 36 ஆக உயர்ந்தபோது ஜி கமலினி 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபக்கம் அதிரடியில் வெளுத்துக்கட்டிய கோங்கடி த்ரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடிக் கொடுத்தார். இந்திய அணி 11.2 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியதுடன் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

கோங்கடி த்ரிஷா தொடர் நாயகி 

இந்திய அணி வெற்றி பெற்றவுடன் நமது வீராங்கனைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கொண்டாடத்தை பகிர்ந்து கொண்டனர். பவுலிங்கில் 3 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 44 ரன்கள் விளாசிய தெலங்கானாவை சேர்ந்த கோங்கடி த்ரிஷா ஆட்டநாயகி விருது வென்றார். மேலும் இந்த தொடர் முழுவதும் 309 ரன்கள் விளாசியது மட்டுமின்றி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவரே தொடர் நாயகி விருதையும் கைப்பற்றினார்.

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை முதன்முறையாக கடந்த 2023ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. இந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போது 2வது உலகக்கோப்பையையும் நமது அணி வென்று வரலாறு படைத்துள்ளது. உலகக்கோப்பை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய இளம் சிங்கப் பெண்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.