கடைசியில் தண்ணி காட்டிய லயன்-போலண்ட்; பரபரப்பான கட்டத்தில் 4வது டெஸ்ட்; நாளை இந்தியா அதிசயம் நிகழ்த்துமா?
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளை கடைசி நாளில் இந்தியா 300க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து அதிசயம் நிகழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) அடித்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் சதம் (114 ரன்) விளாசினார்.
பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தது. முதல் இன்னிங்சில் அதிரடி அரைசதம் விளாசிய சாம் காண்டாஸ் (8 ரன்) பும்ராவின் சூப்பர் இன் ஸ்விங் பந்தில் போல்டானார். இதேபோல் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய முகமது சிராஜ் உஸ்மான் கவாஜாவை 21 ரன்னில் வெளியேற்றினார்.
மீண்டும் மேஜிக் நிகழ்த்திய பும்ரா
தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் (13), டிராவிஸ் ஹெட் (1), மிட்ச்செல் மார்ஷ் (0), அலெக்ஸ் கேரி (2) என அடுத்தடுத்து பும்ரா, சிராஜ் பந்துவீச்சில் மாறி மாறி விக்கெட் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து பரிதவித்தது. ஆனால் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்சேன், கேப்டன் பேட் கம்மின்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய லபுஸ்சேன் தனது 22வது அரைசதத்தை விளாசினார். இருவரும் ஜோடியாக 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்கோர் 148 ஆக உயர்ந்தபோது லபுஸ்சேன் (70 ரன்) சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய பேட் கம்மின்ஸ் (41) ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். உடனே மிட்ச்செல் ஸ்டார்க்கும் (5 ரன்) ரன் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா 173/9 என மீண்டும் நெருக்கடியில் சிக்கியது.
நங்கூரம் பாய்ச்சிய லயன்-போலண்ட்
''இன்னும் ஒரு விக்கெட்டை தான். எளிதாக எடுத்து விட்டு ஆஸ்திரேலியாவை ஆல் அவுட்டாக்கி, இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்று விடலாம்;; என இந்திய வீரர்கள் நினைத்தனர். ஆனால் 10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயன் மற்றும் ஸ்காண்ட் போலண்ட் இந்திய வீரர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கினார்கள்.
பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிஙடன் சுந்தர் என வேக தாக்குதலையும், ஸ்பின் தாக்குதலையும் சர்வசாதாரணமாக சமாளித்த இவர்கள் அணிக்கு தேவையான ரன்களையும் சேர்த்தனர். ஓரளவு பேட்டிங் தெரிந்த லயன் தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட, மறுபக்கம் ஸ்காட் போலண்ட் கைதேர்ந்த பேட்ஸ்மேன் போன்று பும்ரா பந்தையும், ஸ்பின் பவுலிங்கையும் திறம்பட சமாளித்தார். இந்திய பவுலர்களும், கேப்டன் ரோகித் சர்மாவும் இருவரது விக்கெட்டையும் எடுக்க முடியாமல் திணறிப் போனார்கள்.
பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட்
எவ்வளவோ முயன்றும் கடைசி வரை இருவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டுக்கு லயன் போலண்ட் ஜோடி 55 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. நாதன் லயன் 5 பவுண்டரிகளுடன் 54 பந்தில் 41 ரன்களுடனும், ஸ்காட் போலண்ட் 65 பந்தில் 10 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்களும், சிராஜ் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்கள்.
இப்போது ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், நாளை 5ம் நாள் காலை பேட்டிங் செய்யாமல் டிக்ளேர் செய்து விட்டு இதே முன்னிலையை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெல்போர்ன் மைதானத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகப்பட்ச இலக்கே 230 ரன்கள் என்பதால் கடைசி நாளில் இந்திய அணி 300 ரன்களை சேஸ் செய்வது சாதாரண விஷயம் அல்ல.
இந்தியா அதிசயம் நிகழ்த்துமா?
ஆனால் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், பண்ட் ஆகியோர் ரிஸ்க் எடுத்து அதிரடியாக ஆடினால் இலக்கை எட்டிப் பிடித்து அதிசயம் நிகழ்த்தலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு கம்மி தான். ஆனால் நாளை நாள் முழுவதும் பேட்டிங் செய்து இந்தியா இந்த போட்டியை டிரா செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே வேளையில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறவும் ஆஸ்திரேலியாவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் 4வது டெஸ்ட் டிரா ஆகுமா? இல்லை ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா? இல்லை இந்தியா அதிசயம் நிகழ்த்துமா என்பது நாளை தெரிந்து விடும்.