Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிலாஸ்பூர்

ரஞ்சி கிரிக்கெட்டில் இரயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது.

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 28 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. பிலாஸ்பூரில் நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - இரயில்வே அணிகள் (ஏ பிரிவு) சந்தித்தன. முதல் இன்னிங்சில் தமிழகம் 121 ரன்களும், ரெயில்வே 173 ரன்களும் எடுத்தன. 52 ரன்கள் பின்தங்கிய தமிழக அணி 2-வது இன்னிங்சில் கேப்டன் அபினவ் முகுந்த் (100), தினேஷ் கார்த்திக் (163 ரன்) ஆகியோரின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டு 8 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 401 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ரெயில்வே அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்திருந்தது. சவுரப் வாகஸ்கர் (54 ரன்), ஷிவகந்த் சுக்லா (52 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை தொடர்ந்து ஆடிய இரயில்வே அணி 2-வது இன்னிங்சில் 82.2 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சுக்லா (52 ரன்), வாகஸ்கர் (120 ரன்) தவிர மற்றவர்கள் அந்த அணியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 174 ரன்கள் வித்தியாசத்தில் இரயில்வேயைச் சாய்த்த தமிழக அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தமிழகம் தரப்பில் ரங்கராஜன் 4 விக்கெட்டுகளும், நடராஜன், கோசிக் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.