வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சில அதிரடியான மாற்றங்கள் செய்யப்படக்கூடும். 

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெற்றி பெற முடியாவிட்டாலும் அந்த அணி சிறப்பாக ஆடியது. இரண்டு போட்டிகளிலுமே அபாரமாக பேட்டிங் ஆடியது. இரண்டு போட்டிகளிலுமே 300 ரன்களுக்கு மேல் குவித்தது. 

இரண்டு போட்டிகளிலும் உமேஷ் மற்றும் ஷமியின் வேகப்பந்து வீச்சு எடுபடாததால், எஞ்சிய மூன்று போட்டிகளிலுக்கான இந்திய அணியிலிருந்து ஷமி நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று நடக்க உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். ரோஹித், தவான், கோலி, ராயுடு, தோனி ஆகியோர் ஆடுவது உறுதி. ரிஷப் பண்ட்டிற்கு காயம் குறித்த அப்டேட் இல்லை. சரியாகிவிட்ட பட்சத்தில் அவரும் ஆடுவார். அவர் ஆடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மனீஷ் பாண்டே ஆடுவார்.

ஹெட்மயர் ஸ்பின் பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடுவதால் இன்றைய போட்டியில், ஒரு ஸ்பின்னர் ஆட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் குல்தீப், சாஹல், ஜடேஜா ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் ஆடினர். இன்றைய போட்டியில், பெரும்பாலும் ஜடேஜா நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. குல்தீப் மற்றும் சாஹல் ஸ்பின்னர்களாகவும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது களமிறங்க வாய்ப்புள்ளது. 

எனவே கடந்த போட்டிகளில் ஆடிய உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்குவதற்கான வாய்ப்பே உள்ளது. ஆல்ரவுண்டர் என்ற முறையில் ஜடேஜா அணியில் இருந்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளதால், 6 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. 

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராயுடு, ரிஷப் பண்ட்/மனீஷ் பாண்டே, தோனி, குல்தீப், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.