இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்வின் காயத்திலிருந்து மீண்டாலும் போட்டியில் ஆடும் அளவிற்கான உடற்தகுதியை பெற்றுவிட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் 13 பேர் கொண்ட அணியில் அஷ்வினின் பெயரும் உள்ளது. அவர் ஆடுவாரா இல்லையா என்பது நாளை போட்டி தொடங்குவதற்கு முன்பாகத்தான் உறுதி செய்யப்படும். எனினும் அந்த 13 பேரில் ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக உமேஷ் யாதவும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால், அஷ்வின் ஆடாத பட்சத்தில் ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகிய 2 ஸ்பின்னர்களுடனும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடனும் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஷ்வின் ஆடாத பட்சத்தில் ஹனுமா விஹாரி இரண்டாவது ஸ்பின் பவுலிங் தேர்வாகவும் இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார்.  எனவே ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் தான் இறங்குவார் என்பது உறுதியாகிவிட்டது. அது பெரும்பாலும் ஜடேஜாவாகத்தான் இருக்கும். 

சிட்னி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு இல்லை என்பதை கோலி மறைமுகமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் உமேஷ் யாதவும் ஜடேஜாவும் ஆடுவர்.