ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமனானது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. 12, 15, 18 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. ஒருநாள் தொடருக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டன. 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆடும் லெவன் வீரர்களை அறிவித்துவிட்டார். அந்த அணியில் அலெக்ஸ் கேரி, ஃபின்ச்சுடன் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் களமிறங்க உள்ளார். 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரிச்சர்ட்ஸன், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், பீட்டர் சிடில், நாதன் லயன்.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்புள்ள வீரர்களை உள்ளடக்கிய உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.

தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான், 3ம் வரிசையில் கேப்டன் கோலி, 4ம் வரிசையில் அம்பாதி ராயுடு உறுதி. ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக களமிறங்கியிருக்க வேண்டியது. அவர் இறங்கியிருந்தால் கேதர் ஜாதவ் 5ம் வரிசையிலும் தோனி 6ம் வரிசையிலும் இறங்கியிருப்பர். ஆனால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஹர்திக் பாண்டியா ஆடாத பட்சத்தில் அந்த இடத்தில் கேதர் ஜாதவ் இறங்குவார். 5ம் வரிசையில் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படுவார். ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஆடினால், தினேஷ் கார்த்திக் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு. ஹர்திக் பாண்டியா ஆடாத பட்சத்தில் இருவருமே களமிறங்குவர்.

சிட்னி மைதானத்தில் முதல் போட்டி நடப்பதால், கண்டிப்பாக கேப்டன் கோலி குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடன் இறங்குவார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.