ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வழக்கம்போலவே தொடக்க வீரர் வழக்கம்போலவே ராகுல் 9 ரன்களில் இரண்டாவது ஓவரிலேயே வெளியேற, பின்னர் புஜாரா-மயன்க் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது. 

மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமாகி சிறப்பாக ஆடிய மயன்க், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 77 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதையடுத்து புஜாரா - கோலி அனுபவ ஜோடியும் சிறப்பாக ஆடியது. ஆனால் கோலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்த ரஹானே, இந்த முறையும் ஏமாற்றமளித்தார். 18 ரன்களில் வெளியேறினார் ரஹானே.

இதையடுத்து ஹனுமா விஹாரி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் நிதானமாக ஆடிய புஜாரா, டெஸ்ட் அரங்கில் 18வது சதத்தை பூர்த்தி செய்தார். அடிலெய்டு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த புஜாரா, இந்த தொடரில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 3 சதங்களுடன் இரண்டாவது இடத்தை கவாஸ்கருடன் புஜாரா பகிர்ந்துள்ளார். 4 சதங்களுடன் இந்த பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். 

சதத்திற்கு பிறகு ஆக்ரோஷமாக சில ஷாட்டுகளை ஆடினார் புஜாரா. ஆனாலும் அவசரப்படாமல் தெளிவாகவே அந்த ஷாட்டுகளை ஆடினார். புஜாராவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஹனுமா விஹாரியும் சிறப்பாக ஆடினார். இருவரும் சில பவுண்டரிகளை விளாசினர். இரண்டாவது புதிய பந்தை எடுத்த பிறகு சில பவுன்ஸர்களை ஆஸ்திரேலிய பவுலர்கள் வீசிப்பார்த்தனர். ஆனால் அவர்களின் வியூகம் பலனளிக்கவில்லை. இந்த ஜோடியை இன்றைய ஆட்டம் முடிவதற்குள் பிரிக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு  303 ரன்களை குவித்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும் விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.