தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தடகள வீரர் இலட்சுமணனுக்கு, அரைஸ் ஸ்டீல் - தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் (டிஎன்எஸ்ஜேஏ) சார்பில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டன.

அரைஸ் ஸ்டீல் - டிஎன்எஸ்ஜேஏ சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் முதல் இன்டர்நேஷனல் செஸ் மாஸ்டரான மானுவேல் ஆரோன், 1975 உலகக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் வாகைச் சூடிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வி.ஜே.பிலிப்ஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.

இலட்சுமணனின் பயிற்சியாளர் லோகநாதனுக்கு ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது.

விஜய் ஹஸாரே டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிரிக்கெட் அணிக்கு ஆண்டின் சிறந்த அணிக்கான விருதும், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான தமிழக ரக்பி அணிக்கு ஆண்டின் சிறந்த இளம் அணிக்கான விருதும் வழங்கப்பட்டன.

எஸ்.நந்தகுமார் (கால்பந்து), செலீனா தீப்தி (டேபிள் டென்னிஸ்) ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.

அனிதா (கூடைப்பந்து), ஆரோக்ய ராஜீவ் (தடகளம்), ஜெனிதா ஆண்டோ (செஸ்) ஆகியோருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டன.

மேலும், மோகன் குமார் (தடகளம்), சங்கர் முத்துசாமி (பாட்மிண்டன்), பாலதனேஷ்வர் (கூடைப்பந்து), ஜீவானந்தம் (கூடைப்பந்து), இனியன் (செஸ்), பிரியங்கா (செஸ்), அதிதி (கால்பந்து), ஜோதிகா (படகுப் போட்டி), ஸ்ரீகிருஷ்ணா (ஸ்நூக்கர்), யாஷினி (டேபிள் டென்னிஸ்), சுரேஷ் ராஜ் (டேபிள் டென்னிஸ்), தக்ஷினேஸ்வர் சுரேஷ் (டென்னிஸ்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டன.

டெக்கான் கிரானிக்கிள் உறைவிட ஆசிரியர் ஆர்.மோகன், தி இந்து (ஆங்கிலம்) முன்னாள் விளையாட்டு ஆசிரியர் மறைந்த நிர்மல் சேகர் ஆகியோருக்கு விளையாட்டு பத்திரிகையாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பங்கேற்று முக்கிய விருதுகளை வழங்கினார் என்பது கொசுறு தகவல்.