சிங்கப்பூர்,

தரவரிசையில் டாப்–8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.

ஒற்றையர் பிரிவில் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ரெட்’ பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிமோனா ஹாலெப் (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), டொமினிகா சிபுல்கோவா (சுலோவக்கியா) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட்–ராபின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

ஞாயிற்றுக் கிழமை ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ புயல் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7–6 (7–5), 2–6, 6–3 என்ற செட் கணக்கில் போராடி சிபுல்கோவாவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6–2, 6–4 என்ற நேர் செட்டில் மேடிசன் கீஸ்சை பந்தாடினார்.

இன்றைய ஆட்டங்களில் ராட்வன்ஸ்கா–குஸ்னெட்சோவா, பிளிஸ்கோவா–முகுருஜா ஆகியோர் சந்திக்கிறார்கள்.