suresh raina did not get chance to play in south africa series
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும் சிறந்த ஃபீல்டராகவும் வலம்வந்த சுரேஷ் ரெய்னா, இடையில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். மேலும், இந்திய அணியில் இடம்பெறுவதற்காக யோ-யோ என்ற உடற்தகுதி தேர்வில் போதிய பாயிண்ட்ஸ் பெறாததால் ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
யோ-யோ டெஸ்டில் 19.5 பாயிண்ட்ஸ் பெற வேண்டும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் 16 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. அதனால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது யோ-யோ டெஸ்டில் சுரேஷ் ரெய்னா தேர்வாகிவிட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
யோ-யோ டெஸ்டில் தேர்வானதை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை.
யோ-யோ டெஸ்டில் தேர்வாகியும் ரெய்னா தேர்வு செய்யப்படாதது தொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் காரணம் தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரெய்னாவின் ஆட்டம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் தான் தென்னாப்பிரிக்க தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ரெய்னா, அஸ்வின் ஆகிய இருவரும் தோனியின் ஆஸ்தான வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
