மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இரயில்வேயில் பணிபுரிந்து வரும் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு பதவி உயர்வும், ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்களில் கேப்டன் மிதாலி ராஜ், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர், இக்தா பிஸ்ட், பூனம் ரெளத், வேதா கிருஷ்ணமூர்த்தி, பூனம் யாதவ், சுஷ்மா வர்மா, மோனா மேஷ்ராம், ராஜேஷ்வரி கெய்க்வாட், நுஷாத் பர்வீன் ஆகியோர் இரயில்வேயில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் செயலர் மற்றும் செயல் இயக்குநரான ரோகா யாதவ் அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 10 வீராங்கனைகள் தற்போது இரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.