இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெஸ்டர் குக், அவர் ஆடிய காட்சிகளை பார்த்து, ஷாட் செலக்‌ஷனில் கவனம் செலுத்த வேண்டும் என கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நடந்துவருகிறது. இந்த தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு சாம் கரன் என்ற அருமையான வீரரை அடையாளம் கண்டுள்ளது. ஆனால அந்த அணியின் அனுபவ வீரரான அலெஸ்டர் குக்கின் சோகம் தொடர்ந்து வருகிறது.

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் அலெஸ்டர் குக், இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. 2006ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் ஆடிவரும் குக், 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,225 ரன்களை குவித்துள்ளார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான குக், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திணறிவருகிறார். முதல் போட்டியில் 13 ரன்களும் இரண்டாவது போட்டியில் 21 ரன்களும் மட்டுமே எடுத்தார். மூன்றாவது 46 ரன்கள் மற்றும் நான்காவது டெஸ்டில் 29 ரன்கள் என மொத்தமாகவே 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  

இந்நிலையில், அவரது பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஃபார்மில்லாமல் தவித்துவரும் குக், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடுவது கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. கடந்த இன்னிங்ஸில் அவர் அவுட்டான காட்சியை பார்த்து அப்படி விளையாடியதற்கு அவர் வருந்த வேண்டும் என குக்கின் ஷாட் செலக்‌ஷன் குறித்து விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.