ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் தோனிக்கு ஏற்கனவே தான் கூறிய அறிவுரையை மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். 

இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி, அண்மைக்காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். கடந்த ஓராண்டாகவே அவர் சரியாக ஆடவில்லை. ரன்களை எடுக்க திணறுகிறார். தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளும் விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு தேவை என்பதால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை வரை ஆடுவார்.

இளம் பவுலர்கள் முதல் கேப்டன் வரை தோனியின் ஆலோசனை தேவைப்படுவதால் அணியில் அனுபவ வீரர் என்ற வகையில் அவர் ஆடுவது அவசியம். பேட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வந்துவிடலாம். அது என்ன பெரிய விஷயமா? என்றும் சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி நீக்கப்பட்டது, தோனியை ஓரங்கட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

தோனி அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடாததால் அவரால் பேட்டிங்கில் டச்சில் இருக்க முடிவதில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதால் மிகக்குறைந்த போட்டிகளில்தான் ஆடும் வாய்ப்பை பெறுகிறார். அதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும் போட்டிகளில் களத்திற்கு வருவதற்கே தோனி வாய்ப்பு கிடைக்காது. எனவே கிடைக்கும் கொஞ்ச வாய்ப்புகளில் அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அது எளிதான காரியம் கிடையாது. 

இப்படியான சூழலில் ஏற்கனவே தோனிக்கு கூறிய அறிவுரை ஒன்றை மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார் கவாஸ்கர். தோனி பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கும் வண்ணம், உள்ளூர் போட்டிகள் அனைத்திலும் முடிந்தவரை ஆடவேண்டும் என்றும் அதன்மூலம் பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கலாம் என்பதால் அது அவரது ஆட்டத்தை மேம்படுத்தி மீண்டும் ஃபார்முக்கு வர உதவும் என்றார். 

ஆனால் விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் அணியில் திடீரென நுழைந்து அந்த அணியின் ஸ்பிரிட்டை கெடுக்க விரும்பவில்லை என்று கூறி ஜார்கண்ட் அணியில் ஆட தோனி மறுத்துவிட்டார். 

இந்நிலையில், மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ள கவாஸ்கர், ஜார்கண்ட் அணிக்காக தோனி தொடர்ந்து நிறைய போட்டிகளில் ஆட வேண்டும். அது அவருக்கு சிறந்த பேட்டிங் பயிற்சியாக அமையும். 35 வயதை கடந்த வீரர்கள் அனைவருமே அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியாக சில போட்டிகளில் நீக்கப்படுவார்கள். அதனால் அந்த காலங்களில் உள்ளூர் போட்டிகளில் ஆடவேண்டும். தோனி 2019 ஜனவரி வரை அதிகமான போட்டிகளில் ஆட வேண்டும். அது அவருக்கும் அணிக்கும் மிகவும் நல்லது என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.