இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நோ பால் போடுவதை கட்டுப்படுத்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சிறந்து விளங்குகிறது. இந்திய அணி தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சு கலவையை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். இந்திய அணி தற்போதெல்லாம் எதிரணியின் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறது. 

இந்நிலையில், பும்ரா அடிக்கடி நோ பால் வீசுவது அணியை பாதிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக ஆடாத பும்ரா, மூன்றாவது போட்டியில் ஆடினார். மூன்றாவது போட்டியில் களமிறங்கிய பும்ரா, அசத்தலாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார். இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அந்த ஜோடியை பிரித்த பும்ரா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் பந்தில் அடில் ரஷீத்தும் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அது நோபாலாகிவிட்டதால் ரஷீத் தப்பித்தார். 

அதனால் நான்காம் நாளே முடிய வேண்டிய போட்டி ஐந்தாம் நாளும் நீடித்தது. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகள் விழும் பந்து, நோபாலாகிவிட்டால், அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

நான்காவது டெஸ்ட் போட்டியிலும் பும்ரா இரண்டு நோபால்கள் வீசினார். பும்ராவின் மூன்றாவது ஓவரிலேயே ரூட் அவுட்டாகியிருப்பார். பும்ரா வீசிய பந்தில் ரூட்டின் கால் காப்பில் பட்டது. ஆனால் அந்த பந்து நோபால். அதேபோல் இந்தமுறையும் அடில் ரஷீத்திற்கும் நோபால் போட்டு அப்படியொரு வாய்ப்பை கொடுத்தார் பும்ரா. இது அவருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணிக்கே பாதிப்பாக அமைந்துவிடுகிறது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், நோபால் வீசுவதை நிறுத்துவதற்கு பும்ரா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை நிறுத்த கடுமையாக ஒர்க் அவுட் செய்ய வேண்டும். அவர் வீசும் நோபால் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். வேகப்பந்து வீச்சாளருக்கு ரீபால் போடுவது என்பதே அவர்களை கலைப்படைய செய்துவிடும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.