sunil chhetri equals messi in international goals

அதிக கோல் அடித்ததில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சியை இந்திய வீரர் சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார்.

கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா உள்ளிட்ட அணிகள் மோதின. 

லீக் போட்டிகளின் முடிவில், இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் தலா 2 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருந்தன. அதனால் கோல்களின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருந்த இந்தியா மற்றும் கென்யா ஆகிய அணிகள் இறுதி போட்டியில் மோதின. 

இறுதி போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அடிக்கப்பட்ட இரண்டு கோல்களையுமே சுனில் சேத்ரிதான் அடித்தார். இந்த தொடரில் மட்டும் சுனில் 8 கோல்கள் அடித்துள்ளார். 

இதன்மூலம் 64 கோல்களுடன் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை மெஸ்சியுடன் சுனில் சேத்ரி பகிர்ந்து கொள்கிறார். சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டுள்ள பிரபலமான அர்ஜெண்டினா வீரர் மெஸ்சி 64 கோல்களுடன் இரண்டாமிடத்தில் இருந்தார். தற்போது மெஸ்சியுடன் சுனிலும் அந்த இடத்தை பகிர்கிறார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு இந்தியாவில் கணிசமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இந்திய கால்பந்து அணியின் நிலையோ, ரசிகர்களிடம் கெஞ்சும் அளவிற்கு உள்ளது. இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்படும் மெஸ்சிக்கு, தான் எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல என்பதை தனது திறமையால் நிரூபித்துவரும் சுனில் சேத்ரியையும் இந்திய ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடலாம். சுனில், இந்திய திறமை என்ற வகையில், அவரை கொண்டாடலாமே..