இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கிவிட்டு இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் சில வார்த்தைகளை உதிர்த்து வழியனுப்பி வைத்தார். ஐசிசி விதிப்படி, எதிரணி வீரர்களை நோக்கி ஆக்ரோஷமாக திட்டக்கூடாது. ஆனால் ஸ்டூவர்ட் பிராட், ரிஷப் பண்ட்டை பார்த்து ஏதோ பேசினார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட், இந்திய அணியில் களமிறக்கப்பட்டார். இதுதான் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியிலேயே சிக்ஸருன் ரன் கணக்கை தொடங்கி, எதிரணியை மிரளவிட்டார். 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அவர் அவுட்டான பந்தை தவிர மற்ற பந்துகளை திறமையாக ஆடினார். தவறான பேட்டிங் அணுகுமுறையால் ஸ்டூவர்ட் பிராட், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தில் அவுட்டானார். காலை நகர்த்தாமல், பேட்டை மட்டும் விட்டு அடிக்க முயன்றதால், பேட்டின் உள்பக்கத்தில் எட்ஜாகி போல்டானார் ரிஷப் பண்ட். 

ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கியதும், அவரை நோக்கி ஏதோ பேசிக்கொண்டே சென்றார் ஸ்டூவர்ட் பிராட். ரிஷப் பண்ட் அவுட்டான அதிருப்தியில் சென்றார். ரிஷப் பண்ட் பொதுவாகவே ஆக்ரோஷமான வீரர். அறிமுக டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கியபோதே இங்கிலாந்து அணி அதை அறிந்திருக்கும். அறிமுக போட்டியில் களமிறங்கிய வீரரை, அதுவும் ஆக்ரோஷமான மற்றும் திறமையான வீரரை பிராட், இப்படி வழியனுப்பியிருக்க கூடாது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரிஷப் பண்ட் இனிவரும் இன்னிங்ஸ்களில் ஆட வாய்ப்புள்ளது. 

2007ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஸ்டூவர்ட் பிராடின் பவுலிங்கில்தான் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார் அப்போதைய இடதுகை ஆக்ரோஷ வீரர் யுவராஜ் சிங். அந்த ஓவருக்கு முன்னதாக பிளிண்டாப், யுவராஜிடம் மோதலில் ஈடுபட, அதற்கு அடுத்த ஓவரை வீசிய பிராட் மாட்டிக்கொண்டார். பிராடின் ஓவரில் மொத்த கோபத்தையும் காட்டிய யுவராஜ், 6 சிக்ஸர்கள் விளாசினார்.

அதேபோல ஒரு இன்னிங்ஸை பிராடிற்கு எதிராக ரிஷப் பண்ட் கூட ஆடக்கூடும். ஏனென்றால் அதுமாதிரியான வீரர் தான் ரிஷப் பண்ட். அறிமுக வீரர் தானே என்ற நினைப்பில் கூட பிராட் அவ்வாறு வழியனுப்பியிருக்கலாம். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து அடுத்த இன்னிங்ஸ்களில் பிராடின் பந்தை ரிஷப் பறக்கவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.