சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவரும் கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் விளாசியுள்ள கோலி, 62 சர்வதேச சதங்களுடன், சச்சின், பாண்டிங், சங்ககராவிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார் கோலி. 782 இன்னிங்ஸ்களில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால் கோலி வெறும் 388 இன்னிங்ஸ்களில் 62 சதங்களை விளாசியுள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை விரைவில் வீரராகவும் கோலி திகழ்கிறார். 

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகள் உட்பட பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எத்தனை சாதனைகளை முறியடித்தாலும் கோலியால் முறியடிக்க முடியாத சாதனை ஒன்று உள்ளது. அதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் சுட்டிக்காட்டியுள்ளார். கோலி குறித்து பேசியுள்ள ஸ்டீவ் வாக், கோலி பயங்கர ரன் வேட்கையில் உள்ளார். அவர் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறார். அவர் படுமோசமான காயத்தால் பாதிக்கப்பட்டால் மட்டுமே அவரது சாதனைகள் தடைபடும். இல்லையென்றால் டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனையை தவிர மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து காலத்துக்குமான தலைசிறந்த வீரரும் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுபவருமான டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி 99.94. 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்களை விளாசியவர். தற்போது கோலியின் பேட்டிங் சராசரி 54.58. எனவே கோலியால் இந்த சாதனையை மட்டும் முறியடிக்க முடியாது என்பதுதான் ஸ்டீவ் வாக்கின் கருத்து.