தன்னை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரீகாந்த் அந்த பதவியில் நியமிக்கப்பட்டதற்கு பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன் தான் காரணம் என வெங்சர்க்கார் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு ஸ்ரீநிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத்துக்கு பதிலாக விராட் கோலியை அணியில் தேர்வு செய்தது அப்போதைய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன், கேப்டன் தோனி ஆகியோருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் பத்ரிநாத்துக்காக வாதாடினர். ஆனால் நான் தான், விராட் கோலியின் திறமையைக் கண்டு அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்தேன். அதனால் என்னை தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார் என வெங்சர்க்கார் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீநிவாசன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாசன், ஒரு கிரிக்கெட் வீரராக வெங்சர்க்காரை நான் மிகவும் மதிக்கிறேன். அப்படியிருக்கையில் அவர் இந்தமாதிரி பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. அவரது அணித்தேர்வு முடிவில் நான் தலையிட்டதாக கூறியது மிகவும் தவறு. அதனால் அவர் பதவி பறிபோனதாகக் கூறுவதும் முற்றிலும் தவறு. தேர்வு விவகாரங்களில் நான் தலையிடவில்லை.

அதே போல் ஒரு வீரருக்குப் பதிலாக (பத்ரிநாத்துக்குப் பதிலாக விராட் கோலி) இன்னொரு வீரரைத் தேர்வு செய்வதை நான் விரும்பவில்லை என்றும் இதனால் அவர் பதவி இழந்தார் என்றும் கூறுவது தவறு. ஏனென்றால், அவர் கூறும் அந்த  2 வீரர்களுமே இலங்கையில் 2008 தொடரில் ஆடினர்.

அவர் பதவியில் நீடிக்க முடியாததற்குக் காரணம் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக நீடிக்க முடிவெடுத்தார். எனவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விஷயத்தினால்தான் அவர் அணித்தேர்வுக்குழு தலைவர் பதவியை இழந்துள்ளார். எனவே என் மீது அவர் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.