இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான மனநிலையை இந்தியாவிற்கு ஆதரவளித்து வெளிப்படுத்தினர் இலங்கை ரசிகர்கள்.

2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சிக்ஸர் அடித்து தோனி, கோப்பையை வெல்ல, அன்று முதல் இந்தியாவிற்கு எதிரான மனநிலையை இலங்கை ரசிகர்கள் கொண்டிருந்தனர்.

ஆனால் இலங்கை ரசிகர்களின் ஆதரவை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தது வங்கதேசம் தான் என்றே கூறவேண்டும். முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியின்போது, இலங்கை-வங்கதேச வீரர்களுக்கு இடையேயான மோதல் விரும்பத்தகாத ஒன்று. 

இலங்கை மற்றும் வங்கதேச அணி வீரர்கள், தங்களின் வெற்றியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதை கடந்து பரஸ்பரம் வெறுப்பேற்ற பாம்பு நடனத்தை பயன்படுத்தி வந்தனர். கடைசி லீக் போட்டியின்போது, வங்கதேச வீரர் நூருல் ஹசன், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவுடன் மோதியது, கடைசி ஓவரில் நோ-பால் கொடுக்கப்படாததால் போட்டி முடியும் முன்னரே வங்கதேச கேப்டன் ஷாகிப், வீரர்களை திரும்ப அழைத்தது ஆகிய சம்பவங்கள் இலங்கை ரசிகர்களை வெறுப்படைய செய்தது.

மேலும் வங்கதேசம் வெற்றி பெற்றவுடன் அந்த அணியினர் ஒன்றிணைந்து பாம்பு நடனம் ஆடியது இலங்கை ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

அதனால், நேற்றைய இறுதி போட்டியின்போது இலங்கை ரசிகர்கள் தங்களது முழு ஆதரவையும் இந்திய அணிக்கே வழங்கினர். இந்திய ரசிகர்களுடன் இணைந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். இனிமேல் பாம்பு நடனம் கிடையாது.. இந்தியாவிற்கு சியர் என்றெல்லாம் பதாகைகளை ஏந்தியவாறு, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஆட்டத்தின் கடைசி பந்தில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்க, இந்திய ரசிகர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். 

இச்சம்பவம் வங்கதேச வீரர்களை வெறுப்படைய செய்தது. அதை போட்டிக்கு பின்னர் பேசிய வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசனின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.

போட்டிக்கு பின் பேசிய ஷாகிப், வெளிநாட்டு ரசிகர்களின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. ஆதரவு அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும். யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. களத்தில் நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று ஆதரவு தேவையில்லை என்ற தொனியில் பேசினார்.

ஆனால் அதன்பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித், ரசிகர்கள் ஆதரவு அபாரம். இந்தியாவுக்கு வெளியே ஆடுகிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை. 40 ஓவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். பீல்டிங்கில் ரன்களைத் தடுக்கும் போதும், பேட்டிங் இறங்கும்போதும் பலத்த ஆதரவு அளித்தனர், இது மிக முக்கியமானது என ரோஹித் தெரிவித்தார்.