இலங்கை வீரர்களிடையே முற்றிலுமாக நம்பிக்கை குறைந்துவிட்டது. அவர்களிடம் தோல்வி பயம் வெளிப்படுவதைக் காண முடிகிறது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான மஹேல ஜெயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான மஹேல ஜெயவர்த்தனா செய்தியாளர்களிடம் கூறியது:

“இலங்கை வீரர்களிடையே முற்றிலுமாக நம்பிக்கை குறைந்துவிட்டது. அவர்களிடம் தோல்வி பயம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என்ற வேட்கையும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோன்ற விஷயங்களை சரி செய்து, அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வழியை கண்டறிய வேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்களின் செயல்பாடு மிக மோசமாக அமைந்தது. அதனால் அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.

உலகின் முதல் நிலை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடியது இலங்கை வீரர்களுக்கு சவாலான விஷயம்தான். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நெருக்கடியான சூழல்களை இலங்கை வீரர்களால் சமாளிக்க முடியவில்லை.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கும் இலங்கை வீரர்களுக்கு சாதகமாக அமையவில்லை. எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இலங்கை வீரர்களிடம் இல்லை.

அதேநேரத்தில் இந்திய கேப்டன் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் துடிப்பாக இருக்கிறார். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார். அவர் கேப்டனான பிறகு தொடர் வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். அவர், களத்திலும், களத்துக்கு வெளியேயும் அணியை முன்னின்று வழிநடத்துகிறார். மற்ற வீரர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.

இந்திய அணியில் பொறுப்பை உணர்ந்து விளையாடக்கூடிய ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் இந்திய வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இளம் வீரரான ஹார்திக் பாண்டியா மிக அற்புதமான திறமை கொண்டவர். குறிப்பாக டி20, ஒரு நாள் போட்டிகளில் அவர் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார். அவரால் மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை பந்துவீச முடிகிறது. அது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாகும்.

பாண்டியா அற்புதமாக பேட்டிங் செய்கிறார். தேவைப்படும்பட்சத்தில் பெரிய அளவில் ரன் குவிக்கக்கூடிய ஆற்றலும் அவரிடம் உள்ளது. அதனால் சூழலுக்கு தகுந்தாற்போல் வீரர்களை களமிறக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது” என்று அவர் பேட்டியளித்தார்.