Sri Lanka has been defeated and seized by the Test series India ...

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்ததால் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தற்போது நடந்த 3-வது போட்டி சம்னைல் முடியவே தொடரை வென்றது இந்தியா.

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தொடங்கிய 3-வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா.

அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதமடித்து அதிகபட்சமாக 243 ஓட்டங்கள் விளாசினார். தொடக்க வீரர் முரளி விஜய் 155 ஓட்டங்கள் எடுக்க, தொடர்ந்து வந்த ரோஹித் சர்மா 65 ஓட்டங்கள் அடிக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

சாஹா 9 ஓட்டங்கள் , ஜடேஜா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் லக்ஷன் சன்டகன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 135.3 ஓவர்களில் 373 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமால் 164 ஓட்டங்களும், ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 111 ஓட்டங்களும் அடித்தனர்.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, அஸ்வின் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இந்தியா, 2-வது இன்னிங்ஸில் 52.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஷிகர் தவன் அதிகபட்சமாக 67 ஓட்டங்கள் , விராட் கோலி 50 ஓட்டங்கள் எடுத்தனர். ரோஹித் அரைசதம் அடித்தும், ஜடேஜா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் லக்மல், கமகே, பெரேரா, தனஞ்ஜெயா, சன்டகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

இதையடுத்து 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், தனஞ்ஜெயா 13 ஓட்டங்களுடனும், மேத்யூஸ் ஓட்டங்கள் இன்றியும் கடைசிநாள் ஆட்டத்தை தொடங்கினர்.

தனஞ்ஜெயா துணையுடன் இலங்கை நிதானமாக ஆடி, டிராவை நோக்கி போட்டியை கொண்டு சென்றது. மேத்யூஸ் ஒரு ரன்னில் வெளியேறினாலும், இந்தியாவின் வெற்றிக் கனவை தனஞ்ஜெயா தவிடுபொடியாக்கினார். நின்று நிதானமாக ஆடிய அவர் சதம் கடந்தார்.

அவரை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வந்த நிலையில், 219 பந்துகளில் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 119 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக 'ரிடையர்டு ஹர்ட்' ஆனார் தனஞ்ஜெயா.

அடுத்து வந்த கேப்டன் சண்டிமால் 36 ஓட்டங்களில் வெளியேற, இந்தியாவுக்கான நம்பிக்கை கூடியது. எனினும், டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட ரோஷன் சில்வா அதில் தனது முதல் அரைசதத்தை அடித்து நிலைத்தார். அவருடன் டிக்வெல்லாவும் சேர்ந்துகொள்ள, கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி டிரா ஆனது.

இலங்கை 103 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரோஷன் 74 ஓட்டங்கள் , டிக்வெல்லா 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 94 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்திய தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஷமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த நிலையில், 3-வது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை இந்திய கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றார்.