நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

 

இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் மோதும் டி20 தொடர் வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடரை நடத்தும் இலங்கை அணியுடனான முதல் ஆட்டத்தை கொழும்பில் நேற்று இந்திய அணி எதிர்கொண்டது.

 

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து, பேட் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்கள் குவித்தது.

 

இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 90 ஓட்டங்கள் எடுத்தார்.  முன்னதாக, தவனுடன் களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே 'டக்' அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். துஷ்மந்த சமீரா வீசிய பந்தில் ஜீவன் மென்டிஸிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழக்க சுரேஷ் ரெய்னா களம் கண்டார். அவரும் வந்த வேகத்தில் 1 ரன் எடுத்து நடையைக் கட்டினார்.

 

இதையடுத்து, களம் இறங்கிய மணீஷ் பாண்டே தவனுக்கு தோள் கொடுத்தார். இருவரும் சிறப்பான கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன், 10.5-ஆவது ஓவரில் டி20 போட்டியில் தனது 5-வது அரை சதத்தைப் பதிவு செய்தார்.

 

மணீஷ் பாண்டே 12.4-வது ஓவரில் மென்டிஸ் பந்து வீச்சில் குணதிலகாவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். இவர், 35 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

 

டி20 ஆட்டத்தில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவன், 49 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது குணதிலகா பந்துவீச்சில் திசரா பெரேராவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார்.

 

ரிஷப் பந்த் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய 174 ஓட்டங்கள்  எடுத்தது.

 

பின்னர், 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய இலங்கை அணி பவர் ப்ளேயில் 75 ரன்கள் எடுத்தது.

 

குணதிலகாவும், குசல் மென்டிஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி, முறையே 19, 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, குசல் பெரேரா, கேப்டன் தினேஷ் சண்டிமல் ஜோடி அதிரடியாக விளையாடியது.

 

குசல் பெரேரா 8-வது அரை சதம் பதிவு செய்தார்.  8.5-வது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் 14 ரன்களில் சண்டிமல் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸை தனது சுழலில் சாய்த்த வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 66 ஓட்டங்களில் குசல் பெரேரா 'ஸ்டம்பிங்' ஆனார்.

 

அடுத்து வந்த உபுல் தரங்கா 17 ஓட்டங்களில் சாஹல் ஓவரில் ஆட்டமிழந்தார். தசன் ஷனகா, திசர பெரேரா ஆட்டமிழக்காமல் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர். இவ்வாறு 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், அந்த அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

 

நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா என்பது கூடுதல் தகவல்.