ஐபிஎல் தொடரில் நேற்று மும்பைக்கும் ஹைதராபத்துக்கும் இடையேயான போட்டியில் கடைசி பந்தில் இலக்கை எட்டி ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி சார்பில் ரோஹித் சர்மா மற்றும் லெவிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 11 ரன்கள் எடுத்து ரோஹித் அவுட்டானார்.

அதன்பிறகு இறங்கிய இஷான் கிஷான், தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி மிரட்டினார். ஆனால் அவர் 9 ரன்களில் வெளியேற, லெவிஸும் 29 ரன்களில் வெளியேறினார். குருணல் பாண்டியா, பொல்லார்டு, பென் கட்டிங், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சீரான இடைவெளியில் அவுட்டாக, 20 ஓவரின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. 

148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் சஹாவும் தவானும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 22 ரன்களில் சஹாவும் 6 ரன்களில் கேப்டன் வில்லியம்சனும் வெளியேறினர். ஆனால் மறுமுனையில் ஷிகர் தவான் அதிரடியாக ஆடிவந்தார். 

45 ரன்கள் குவித்த தவான், மார்கண்டே சுழலில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்தார். அதன்பிறகு மனீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹாசன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்கத்தில் ஹைதராபாத் வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்ததால், இலக்கு எளிமையாக இருந்ததால், ஹூடாவும் யூசுப் பதானும் அவசரப்படாமல் ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர்.

இந்த இணை பொறுமையாக ஆடி, வெற்றியை நெருங்கி கொண்டிருந்தபோது யூசுப் பதான், பும்ராவின் பந்துவீச்சில் வெளியேறினார். அதே ஓவரில் ரஷீத் கானும் வெளியேற, மும்பை அணிக்கு நம்பிக்கை துளிர்த்தது. 

12 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்நிலையில், 19வது ஓவரை வீசிய முஷ்தாபிஷர், ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மும்பை அணிக்கு வலுத்தது. ஹைதராபாத் அணிக்கு 19 ரன்கள் தேவை. மும்பை அணிக்கு ஒரே ஒரு விக்கெட் தேவை. ஒரு விக்கெட்டை கைப்பற்றலாம் அல்லது 11 ரன்கள் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தலாம்.

இப்படியான இக்கட்டான சூழலில் கடைசி ஓவரை பென் கட்டிங் வீசினார். மும்பை அணியின் வெற்றி கனவை தகர்க்கும் விதமாக முதல் பந்தையே சிக்ஸர் விளாசினார் ஹூடா. அடுத்த பந்து வைட், அதனால் கூடுதலாக ஒரு ரன் கிடைத்தது. திரும்ப வீசப்பட்ட இரண்டாவது பந்தில் ரன் ஏதுமில்லை. மூன்றாவது பந்தில் ஒரு ரன்.

இப்போது 3 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை. 4வது பந்திலும் 5வது பந்திலும் ஒவ்வொரு ரன்கள் எடுக்கப்பட்டன. 5வது பந்தில் ஹூடா அடித்த ஷாட், டாப் எட்ஜ் ஆக, அந்த கேட்ச் வாய்ப்பை பும்ரா தவறவிட்டார். கடைசி பந்தில், ஒரு ரன் தேவைப்பட, ஸ்டான்லேக் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி, தோல்வியின் பக்கம் சரிசமமாக பயணித்தன. ஹைதராபாத் அணி அதிரடியாக தொடங்கினாலும் கூட, எளிய ஸ்கோரை விரட்ட அந்த அணியை கடைசி பந்துவரை அலையவிட்டது மும்பை அணி.

இரண்டு வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள மும்பை அணி, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.