ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடையையும், அவருக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

2013-ல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜீத் சாண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து டெல்லி நீதிமன்றம் கடந்த 2015 ஜூலையில் விடுவித்தது. பின்னர் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஸ்ரீசாந்த்.

அவருடைய மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், “இது தொடர்பாக பிசிசிஐ தனது பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

பிசிசிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "டெல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு (ஸ்ரீசாந்தை விடுவித்தது) மட்டும் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்குவதற்கு போதுமானதல்ல. அவர் மீதான தடையை நீக்கும்பட்சத்தில் அது ஐசிசியின் விதிமுறையை மீறிய செயலாகிவிடும்.

எனவே பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்குவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. எனவே அவர் மீதான வாழ்நாள் தடை நீக்கப்படுகிறது. அவருக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யப்படுகிறது” என்றும் உத்தரவிட்டது.