இந்தி பிக்பாஸ் 12வது சீசனில் கலந்துகொண்டுள்ள சர்ச்சைக்கு பெயர்போன கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

சூதாட்டப் புகார் காரணமாக ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். ஸ்ரீசாந்த் இருக்கும் இடத்தில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சை எனுமளவிற்கு சர்ச்சைகளில் சிக்கியவர் ஸ்ரீசாந்த். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது போன்ற பரபரப்புகளுக்கு சொந்தக்காரர்.

கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஸ்ரீசாந்த், ஜாரீர் கான் நடித்த அக்சர்-2 என்ற பாலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமானார். நடிப்பு ஒருபுறமிருக்க, பாஜகவில் இணைந்த ஸ்ரீசாந்த், 2016ல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இவ்வாறு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டபிறகு சினிமா, அரசியல் என பலதுறைகளில் காலடி பதித்த ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனிலும் கலந்துகொண்டுள்ளார். சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சக போட்டியாளரான சோமி கானுக்கும் ஸ்ரீசாந்துக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது சோமி கானை பார்த்து உன்னை வளர்த்த விதம் சரியில்லை என நேரடியாக கூறிய ஸ்ரீசாந்த், நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் வார இறுதியில் வந்த சல்மான் கான், இதுதொடர்பாக ஸ்ரீசாந்திடம் கேள்வி எழுப்பினார். ஸ்ரீசாந்தின் பேச்சை சல்மான் கான் கண்டிக்கா, சல்மானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஸ்ரீசாந்த். வாக்குவாதம் முற்றவே, நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புவதாக சல்மான் கானிடமே தெரிவித்தார் ஸ்ரீசாந்த். 

ஸ்ரீசாந்த் இருக்கும் இடத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. சர்ச்சைக்கே பெயர்போன பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை நாயகனை விட்டால் சொல்லவா வேண்டும்..?