காமன்வெல்த் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் - செளரவ் கோஷல் இணை அரையிறுதிக்கும், விக்ரம் மல்ஹோத்ரா - ரமீட் டாண்டன் இணை காலிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

இதில், ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் மலேசியாவின் டென்ஸி இவான்ஸ் - பீட்டர் கிரீட் இணையை இந்தியாவின் தீபிகா - செளரவ் இணை 11-8, 11-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் விக்ரம் மல்ஹோத்ரா - ரமீட் டாண்டன் இணை 11-4, 11-10 என்ற செட் கணக்கில் ஜமைக்காவின் கிறிஸ்டோபர் - லீவிஸ் வால்டர்ஸ் இணையை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. 

ஆனால், மற்றொரு மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா - ஹரீந்தர் பால் சாந்து இணை 10-11, 10-11 என்ற செட் கணக்கில் நியூஜிலாந்தின் ஜோலி கிங் - பால் கால் இணையிடம் வீழ்ந்து வெளியேறியது.