Spot natuvare panisment cricketers will commit disorder

போட்டியின்போது களத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் போட்டியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை நடுவருக்கும் வழங்கும் வகையில், விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அறிவித்துள்ளது.

மேலும், புதிய திருத்தத்தின் படி, கிரிக்கெட் பேட்டின் அளவு மாற்றப்படவுள்ளது. அத்துடன், ரன் அவுட்டில் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சலுகையாக, ரன் எடுக்க ஓடும் அவர்கள் தங்களது பேட்டை தரையில் படாதவாறு கிரீஸ் தாண்டி வைத்திருந்தாலும் அவர்கள் கிரீஸுக்குள் வந்துவிட்டதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற எம்சிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தின்போது முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த புதிய திருத்தத்தின் அம்சங்களாவன:

1.. நடுவரின் தீர்ப்புக்கு எதிராக அவரிடம் அதிகப்படியாக கோரிக்கை வைப்பது, அதற்கு இணங்காமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வீரர்கள் முதலில் எச்சரிக்கப்படுவர். மீண்டும் அவ்வாறு செயல்பட்டால், எதிரணிக்கு கூடுதலாக 5 ஓட்டங்கள் வழங்கப்படும்.

2.. எதிரணி வீரர்கள் மீது பந்தை எறிவது, அல்லது அவர்களுடன் உடல் ரீதியாக மோதுவது போன்ற தவறுகளுக்கு தண்டனையாக, எதிரணிக்கு உடனடியாக 5 ஓட்டங்கள் வழங்கப்படும்.

3. நடுவருக்கு மிரட்டல் விடுப்பது, எதிரணி வீரர், அதிகாரிகள், பார்வையாளர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 5 ஓட்டங்கள் அபராதமாக விதிக்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட வீரர் குறிப்பிட்ட ஓவர்களுக்கு (போட்டியின் அடிப்படையில்) போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்.

4. நடுவரை மிரட்டுவது, மைதானத்தில் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வீரர் போட்டி முழுவதுமாக நீக்கப்படுவார்.

சம்பந்தப்பட்ட வீரர்/வீராங்கனை பேட்டிங் செய்துகொண்டிருந்தால், அவர் "ரிட்டையர்டு அவுட்' ஆனதாக ஆக அறிவிக்கப்படுவார். மேலும், 5 ஓட்டங்கள் அபராதமாக விதிக்கப்படும்.