south africa won test series
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்களும் இந்திய அணி 307 ரன்களும் எடுத்தது.
28 ரன்கள் முன்னிலை என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 258 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி, பார்திவ் படேல் ஆகிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோஹித் சர்மா மட்டும் நீண்ட நேரம் போராடினார்.
ஆனால் அவரும் 47 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய முகமது சமியும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 151 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.
கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றமளித்து விட்டது.
